அனைவருக்கும் இலவச கல்வி அரசே வழங்க வேண்டும்! - ஓர் அலசல் கட்டுரை : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday, 19 June 2017

அனைவருக்கும் இலவச கல்வி அரசே வழங்க வேண்டும்! - ஓர் அலசல் கட்டுரை :

அனைவருக்கும் இலவச கல்வி அரசே வழங்க வேண்டும்! - ஓர் அலசல் கட்டுரை

கல்வி மனிதனின் அடிப்படை உரிமை என்பதனால் அதை ஒவ்வொரு மனிதருக்கும் கொண்டு சேர்ப்பது அரசின் கடமை ஆகும். எனவே, கல்வியை இலவசமாகக் கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் சமூகத்தின் கடைக்கோடியில் உள்ள மனிதனுக்கும் கல்வி வாய்ப்பு உறுதிசெய்யப்படும்.
இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாட்டில் இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.கல்வி குறித்த ஆய்வுகள் அவ்வப்போது நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அந்த ஆய்வு முடிவுகளுக்கேற்ப புதுப்புது கல்விக்கொள்கைகள் ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. சிலகாலம் சென்றபின் அதன் நிறைகுறைகள் ஆராயப்படுவதும் பின்னர் புதிய கல்விக்கொள்கைகள் அறிமுகமாவதுமாக உள்ளன.கல்வி மேம்பாட்டுக்கான எத்தனையோ திட்டங் களை நம் நாடு கண்டிருக்கிறது, ஆனால், அதனால் ஏற்பட்ட விளைவுகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை.
கல்வியில் வளர்ந்த நாடுகளிடம் நாம் இன்னும் கற்கவேண்டிய பாடங்கள் பல உள்ளன. நம் நாட்டு அரசியலமைப்பு அதற்கு ஏற்றதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
* பெற்றோரின் நோக்கம் மாற வேண்டும்
கல்வியில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை வழங்கிடவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளனர். கொடுக்கும் கல்வி எல்லா விதத்திலும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதைக் கவனிக்க மறந்துவிடுகின்றனர்.

இந்த மனப்போக்கு மாறாமல் கல்வியில் மாற்றம் சாத்தியமில்லை. கல்வி கற்பதற்காகச் செலவிடும் தொகையைப்போல் பல மடங்கு தொகையை தம் குழந்தை படித்து முடித்து பணிக்குச் சென்று ஈட்டவேண்டும் என்கிற மனோபாவம் ஆரோக்கியமானது இல்லை. கல்வியை ஒரு பொருளாதார நடவடிக்கையாகப் பார்க்காமல் சமூக மேம்பாட்டிற்கான ஆயுதமாக மாற்றிட வேண்டும் என்கிற தொலைநோக்குச் சிந்தனையை நம் கல்விமுறை இந்தச் சமூகத்தில் இதுவரை ஏற்படுத்தவில்லை.

கல்விக்காகச் செலவிடும் தொகையை விடவும் கூடுதலான தொகையைக் கல்விக்கூடத்திற்குச் செல்லும் வாகனங்களுக்காகவும் விடுதிகளுக்காகவும் செல்விடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்விக்குச் செலவிடும் தொகையை முதலீடாகப் பார்ப்பதன் விளைவுதான் இந்த நிலைக்குக் காரணம். இத்தகைய செலவுகளைக் குறைக்கவே அருகமை பள்ளிமுறையை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிவருகின்றனர்.
* அருகமை பள்ளி முறை
குழந்தைகளுக்கு ஐந்து வயதில்தான் எழுது வதற்கான விரல் ஒருங்கிணைப்பு ஏற்படும் என்கிற தகவல் எத்தனை பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கும்? எப்போது இரண்டரை வயது ஆகும் எனக் காத்துக்கொண்டிருந்து மிகவும் சிறப்பான ஒரு பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் குறிக்கோளாக உள்ளது. அதற்காக தம் குழந்தை எவ்வளவு தூரம் பயணித்தாலும் கவலை இல்லை.

கிராமங்களில் வாழும் பெற்றோர்கள் நகரத்துப் பள்ளிகளுக்கும், நகரங்களில் வாழும் பெற்றோர்கள் வேறு ஒரு நகரத்துப் பள்ளிகளுக்கும் தம் குழந்தைகளை அனுப்பி படிக்க வைப்பதே தன் தகுதிக்கு ஏற்றதாகக் கருதுகின்றனர். இந்த எண்ணம் எப்படி பரவியது, எப்போது பரவியது என்றே தெரியவில்லை. நாம் வாழும் ஊரில் நம் வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளியில் நம் பிள்ளை படிக்கக்கூடாது என்பதில் பெரும்பாலான பெற்றோர்கள் உறுதியாக உள்ளனர்.

சிற்றூர்களிலும் சிறு நகரங்களிலும் இந்த நிலை என்றால் பெரு நகரங்களில் நல்ல பள்ளிக்கு அருகில் வீடு பிடித்து தங்கிவிடுவது அல்லது வீட்டை விலைக்கு வாங்குவது போன்ற போக்குகள் நிலவுகின்றன. பெற்றோர்கள் தம் வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளியைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.

அந்தப் பள்ளியின் நடவடிக்கைகள் அவர்களுக்குத் திருப்தியளிக்கவில்லை என்பதனால் தொலைவில் உள்ள வேறு ஒரு பள்ளியைத் தேடுகிறார்களா? அல்லது தம் தகுதிக்கு இந்தப் பள்ளி ஒத்துவராது என்பதாலா? அவர்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும் அருகமை பள்ளியில் சேர்ப்பதே சிறந்தது. பள்ளி நடவடிக்கைகளைக் கண்காணித்து அதன் வளர்ச்சியில் பெற்றோர்கள் பங்களிப்பதன் மூலமே அருகமை பள்ளி முறை சாத்தியமாகும்.

மேலும் ஐந்து வயதில்தான் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினால் அருகமை பள்ளி முறையை செயல்படுத்துவது ஓரளவு எளிதாகும். இரண்டரை வயதிலேயே குழந்தைகளுக்குக் குதிரை ஏற்றமும் நீச்சல் பயிற்சியும் தேவைதானா? அந்தச் சின்னஞ்சிறு குழந்தைக்கு என்னவெல்லாம் கற்றுத்தர வாய்ப்பிருக்கிறதோ அத்தனையும் கற்றுக்கொடுக்க ஆசைப்படும் பெற்றோரின் பேராசையைக் காசாக்க நினைக்கிறார்கள் நம் கல்வித் தந்தைகள்.

* கல்வி இனி இலவசம்
ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பல சீர்கேடுகள் நிகழ்ந்த பிறகு அதனை அரசு கையகப்படுத்தி அதற்கான சட்டம் இயற்றி முழுவதுமாக அரசுக் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகும் மாணவர்களுக்கான கட்டணத்தைக் குறைக்க இயலாத அரசுதான் ஆண்டுகொண்டிருக்கிறது. இவர்களால் தனியார் பள்ளிகளை முழுவதுமாக ஒழித்துவிட முடியும் என்று குழந்தை கூட நம்பாது.

ஆனால் இதற்கு மேலும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்கிற உறுதியையாவது இவர்களால் வழங்க முடியுமா? கல்வியை இலவசமாக வழங்கிட வேண்டுமெனில் அது அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அதற்கான முயற்சியை எந்த அரசும் மேற்கொள்ளவில்லை.

அப்புறம் எப்படி இலவசக்கல்வி சாத்தியமாகும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி என்பதற்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டும் அதேவேளையில் குழந்தைத் தொழிலாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றனர். நம் கல்வி அனைவருக்குமானது என்றால் குழந்தைகள் பள்ளிகளை விட்டு வெளியேறுவது ஏன்? இடைநிற்றல் விகிதம் நாம் எதிர்பார்த்த அளவு குறையவில்லை.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு நமக்கான கல்வி முறையை அதிலும் இலவசமாகக் கல்வி கற்கும் ஒரு திட்டத்தை வடிவமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு குடும்பமும் கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் கணிசமான தொகையைச் செலவிடும் அவலநிலையை நம் ஆட்சியாளர்கள் மாற்றிட வேண்டும். கல்வி இனி இலவசம் என்ற நிலை உருவாக வேண்டும்.

* காலத்திற்கேற்ற கல்வி
மெக்காலே கால கல்விக்கு விடுதலை அளித்து காலத்திற்கேற்ற கல்வி முறையை உருவாக்கிடவேண்டும். கல்வி சமூக மாற்றத்திற்கு வித்திடவேண்டும். வளர்ந்த நாடுகளில் அவர்களுக்கான கல்வியை எப்படி வடிவமைத்தனர் என்று நாம் பாடம் கற்க வேண்டுமேயன்றி அதேபோன்று கல்வி முறையை நாம் உருவாக்கக்கூடாது. நமக்கான கல்வியை நாமே உருவாக்கவேண்டும்.

கல்வியின் வாயிலாக ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் மேம்படுத்திக்கொள்ள வழி வகுக்கவேண்டும். வேலை வாய்ப்புக்காக பிறரிடம் கையேந்தாமல் தானே வேலை வாய்ப்பை ஏற்படுத்துபவர்களாக நம் மாணவர்களை உருவாக்கும் ஒரு கல்வி முறையை உருவாக்கிடவேண்டும். தகவல் தொழில் நுட்பங்களால் மட்டுமே ஒரு நாடு முன்னேறிவிட முடியாது.
நமக்கான உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும். அதனை நம் கல்விமுறை ஊக்கப்படுத்த வேண்டும். வெள்ளைச் சட்டைப் பணிகளுக்கு அளிக்கும் அதே முக்கியத்துவம் உழைப்பு சார்ந்த உற்பத்தி சார்ந்த பணிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும். கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். சமச்சீரான கல்வி வழங்கப்பட வேண்டும்.

மரபான தொழில்நுட்பங்கள் நம் கல்விக்கு எதிரானவை அல்ல அவற்றையெல்லாம் நம் கல்வி ஆதரித்துப் போற்றவேண்டும். மரபுவழி வேளாண்மை, மரபுவழி மருத்துவம், மரபுவழி கட்டடக்கலை, மரபு வழி அறிவியல் தொழில்நுட்பம் போன்றவை நவீன அறிவுக்கு எதிரானவை அல்ல. நவீன அறிவை மேம்படுத்த மரபுவழி அறிவு துணை நிற்கும் என்பதை மறந்துவிடலாகாது.

* வளர்ச்சியை நோக்கிய கல்வி
நம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் கல்வி முறையை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தும் முழுப்பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும். கல்வியை இனி அரசு மட்டுமே அளிக்கும் என்ற நிலையைப் படிப்படியாக ஏற்படுத்த வேண்டும். அதற்காக இன்னும் ஐம்பது ஆண்டுகள் வேண்டுமானாலும் அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசே நடத்தினால் அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க விழிப்புணர்வுப் பேரணியும் அவசியமில்லை.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டிய அவசியமுமில்லை. நாட்டின் வளர்ச்சி கல்வியின் மூலம்தான் சாத்தியமென்றால் கல்விக்கூடங்களை அரசே நடத்துவதில் தயக்கம் ஏன்? சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் செயல்படும் ஆட்சியாளர்கள் இருந்தால் இலவசக் கல்வி கட்டாயம் சாத்தியமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad