Healthy eating habits for your children |Kalvikural.com - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 7 December 2016

Healthy eating habits for your children |Kalvikural.com

அடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வேண்டுமா..?!

‘என் 6 வயது மகள், பள்ளிக்குக் கொண்டு செல்லும் மதிய உணவில் முக்கால்வாசியை வீட்டுக்குக் கொண்டுவந்து விடுகிறாள். வீட்டில் நான் போராடுவதுபோல, பள்ளியில் அவள் டீச்சரும் எவ்வளவோ அதட்டிப் பார்த்தும் பலனில்லை. உண்மையில், என் குழந்தையைச் சாப்பிட வைப்பதுதான் என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய சவால்!’’
- மதுரையைச் சேர்ந்த இந்தத் தாயின் புலம்பலை, உலகத் தாய்களின் பொதுக் கதறல் என்றே சொல்லலாம்.
குழந்தைகள் சாப்பிட மறுப்பதற்கும், ஜங் ஃபுட் விரும்புவதற்கும், சத்தான உணவுகள் பற்றி அறியாமல் இருப்பதற்கும், டி.வி பார்த்துக்கொண்டே, மொபைலில், `டேப்’பில் விளையாடிக்கொண்டே சாப்பிடுவதற் கும்... இப்படி குழந்தைகளின் தவறான உணவுப் பழக்கங்கள் அனைத்துக்கும் காரணம் குழந்தைகள் அல்ல; பெற்றோர்களே! அதை மறுப்பதை விட்டு, இந்தத் தவறுகளை எப்படி சரிசெய்துகொள்வது என்று பார்ப்போம்!

‘பீட்சாவில், என் பிள்ளைக்கு பார்பெக்யூ சிக்கன்தான் பிடிக் கும்’, ‘நான் அவன் ஸ்நாக்ஸுக்கு `சாக் கோ-பை' முழு பாக்ஸே வாங்கி வெச்சிருவேன்’, ‘நியூட்ரிலா இல் லாம அவன் இட்லி சாப்பிடவே மாட்டான்’ - இப்படி எல்லாம் பேசும், இதையெல்லாம் செய்யும் பெற்றோரின் மனநிலை ஒன்றுதான்... ‘நாங்கள் எங்கள் பிள்ளைக்கு விலை உயர்ந்த உணவுப் பொருட்களை வாங்கித் தருகிறோம்!’ என்ற பெருமையை வெளிப்படுத்துவது. குழந்தைகளின் உணவுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பது முக்கிய மல்ல, அவர்களுக்கு எந்தளவுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். அந்த வகையில், ஜங் ஃபுட்கள் வாங்கிக் கொடுத்து, தங்கள் ‘ஸ்டேட்டஸ்’ஸை குழந்தைகளின் உணவிலும் நிரூபிக்க விளை கிற பெற்றோர்கள், உண்மையில் உங்கள் பெருமைக்காக அவர்களின் ஆரோக் கியத்தைச் சிதைக்கிறீர்கள் என்பதே உண்மை.
‘மேகி’ விவகாரம், உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்படும்போது நஞ்சாக மாறுவதை உரக்கச் சொல்லிவிட்டது. இன் னமும், ‘என் பிள்ளைக்கு பேக்டு ஸ்நாக்ஸ் அயிட்டம் வாங்க சூப்பர் மார்க்கெட் போறேன்!’ என்றால், 20 வயதுகளிலேயே அவர்களுக்காக டாக்டர் அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டி வரலாம் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள்.
‘சத்தான உணவாகக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்’ என்றால், ‘சத்தான உணவு என்றால் என்ன?’ என்கிறார்கள் பெற்றோர்கள் சிலர். வீட்டில், சுகாதாரமான முறையில் நாம் தயாரிக்கும் இட்லி, தோசை, புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சட்னி... சாம்பார், காய் பொரியல், கீரை, கூட்டு, ரசம் என சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்கப்படாத நம் அன்றாட சமையலே ஆரோக்கியமான உணவுதான். ஆப்பிள், ஆரஞ்சைவிட, கொய்யா, சப்போட்டா, மா, வாழை என நம் மண்ணின் தோட்டத்தில் விளையும் பழங்கள் தரவல்ல சத்துகள் நிறைய! சிறுதானியங்கள் பற்றிய விழிப்பு உணர்வு பெருகியுள்ள நிலையில், ஏற்கெனவே சில அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவற்றை விரும்பும் சுவையில் சமைத்துத் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கோலா பானங்களுடன் சோம்பேறித்தனத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, மோர், பானகம், பழ ஜுஸ் செய்து தந்தால், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அது எந்தளவுக்கு பலம் சேர்க்கும் தெரியுமா?!
அடுத்ததாக, குழந்தைகளுக்கு சாப்பிடும் முறையே தெரியவில்லை. எப்படித் தெரியும்? பெற்றோர் கற்றுக்கொடுத்தால், அவர்கள் அதன்படி நடந்தால்தானே குழந்தைகளுக்கு அது பற்றித் தெரியும். அம்மாக்கள், தட்டு நிறைய சோறு போட்டுக்கொண்டு, ‘இன்னிக்கு கூட்டு நல்லாயிருக்கா’, ‘இந்த மட்டன் சூப் குடிச்சா பீமன் மாதிரி ஆயிடலாம்’ என்று உணவைப் பற்றிய சிறு அறிமுகம் கொடுத்து, பின்னர் குழந்தைகளின் கண்கள் விரிய கதை சொல்லிக்கொண்டே கைகளால் ஊட்டிவிட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. குழந்தையின் ஒரு கையில் தட்டையும், இன்னொரு கையில் ரிமோட்டையும் கொடுத்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போகும் ‘பரபர’ அம்மாக்களால், டி.வி பார்த்துக்கொண்டே, என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்றே அறியாமல் சாப்பிடுகிறார்கள்... இல்லை, விழுங்குகிறார்கள் குழந்தைகள்.

தரையில் சம்மணமிட்டு அமர வைத்து, தட்டும் தண்ணீரும் வைத்து, ‘சூப், குழம்பு, ரசம், தயிர்... இந்த வரிசையில்தான் சாப்பிடணும். கடைசியில பாயசம் குடிச்சா, அந்த இனிப்பு செரிமானத்துக்கு உதவும்’ என்று கற்றுக்கொடுத்து, ‘சிங்கராஜா எப்பவும் சாப்பாட்டை நல்லா மென்றுதான் சாப்பிடுவார். அதனாலதான் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கார். நீயும் நல்லா மென்று சாப்பிடணும்’, ‘கேரட் சாப்பிட்டா, கண்ணுக்கு அவ்வளவு நல்லது’, ‘குட்டிப் பாப்பாவுக்கு நிறைய முடி வளரணும்னா, கொஞ்சம் கீரை சாப்பிடணும்’ என்று கதைகள் பேசி... இப்படியெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உணவு முறைக்காக மெனக்கெட்டும், அவர்கள் ‘டி.வி போட்டாதான் சாப்பிடுவேன்’ என்றால், பிறகு சொல்லுங்கள்!
‘அய்யோ... நான் எவ்வளவு போராடியும் என் பிள்ளை சாப்பிடவே மாட்டேங்குது. சாப்பாட்டைப் பார்த்தாலே அதுக்கு உமட்டுது!’ - முக்கியப் பிரச்னை இதுதான். இதற்கு சில தீர்வுகளைப் பார்ப்போம். ஒரு விஷயத்தை குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தி திணித்தால், ஒரு கட்டத்தில் அது அவர்கள் மனதில் வெறுப்பாக மாறிவிடும். எனவே, அவர்களுக்குப் பசி எடுத்த பின்னரே உணவு கொடுங்கள். பசிக்காத வயிறுடன் இருக்கும் பிள்ளையை, ‘சாப்பிடு சாப்பிடு’ என்று அரற்றினால், வாயைத் திறக்காது. ‘அவ காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும்கூட பட்டினியா கிடப்பா’ என்றால், சரி கிடக்கட்டும்! அதற்கு மேல்..? ‘அம்மா பசிக்குது!’ என்று நிச்சயமாக வரும். அப்போது, அதற்குப் பிடித்த உணவைக் கொடுங்கள்.
சில குழந்தைகள் எந்த உணவின் மீதும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். தோசையை பொம்மை வடிவில் ஊற்றிக் கொடுப்பது, ஆங்கில எழுத்துக்களின் வடிவில் ஊற்றிக் கொடுப்பது, மினி இட்லிகள் செய்து கொடுப்பது, சாதத்தில் கேரட் பொரியலை ஸ்மைலை வடிவில் பரப்பி சாப்பிடச் சொல்வது, அரைக்கீரையை மாவுடன் கலந்து ‘க்ரீன் தோசை’யாக ஊற்றிக் கொடுப்பது என, குழந்தைகளுக்குப் பிடித்த வடிவத்தில், நிறத்தில் உணவு வகைகளைச் செய்து கொடுத்து, அதன் ஆர்வத்தை தூண்டி, சாப்பிட வையுங்கள். கீரை, பாகற்காய் போன்ற குழந்தைகள் அதிகம் விரும்பாத உணவுகளை, விசேஷம், விருந்து, சுற்றுலா போன்ற ஒரு சந்தோஷ தருணத்தில் அறிமுகப்படுத்துங்கள்.
உணவை வீணாக்கும், சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பிளாட்ஃபார்மில் ஒருவேளை உணவுக்காக கஷ்டப்படும் பிள்ளைகளைக் காட்டுங்கள். அவர்கள் கையாலேயே அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு உணவுப் பொட்டலமோ, பழமோ கொடுக்க வைத்து, ‘இப்படியெல்லாம் குழந்தைங்க சாப் பாட்டுக்குக் கஷ்டப்படும்போது, நீ உணவை வீணாக்கலாமா?’ என்று அதன் மனதுக்கு நெருக்கமாகப் பேசுங்கள். மனித நேயத்தையும் சேர்த்தே வளர்க்கலாம்!
காய்கறி, சிக்கன், மீன் வாங்கும்போது அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். உணவுப் பொருட்கள் தேர்வு தொடங்கி, நுகர்வோர் அறிவு வரை அவர்கள் அறியப் பெறுவார்கள்.
குழந்தை ஆர்வத்துடன் சாப்பிடுவதற்கும், ஆரோக்கியமானவற்றை சாப்பிடுவதற்கும் பெற்றோரே பொறுப்பு! Source Vikadan
ரிலாக்ஸ்...
டாக்டர் அபிலாஷா  படம்: தி.கௌதீஸ்
தொகுப்பு: சா.வடிவரசு

No comments:

Post a Comment

Post Top Ad