சென்னை, திருமங்கலத்தை சேர்ந்தவர் ஆர்.ரமேஷ். இவர், ஐகோர்ட்டில் தாக்கல்
செய்துள்ள மனுவில், மாற்றுத்திறனாளியான நான் தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-1 முதல் நிலை தேர்வில்
வெற்றிப் பெற்றேன். இதையடுத்து ஜூன் 5-ந் தேதி (இன்று) முதல் 7-ந் தேதி வரை
குரூப்-1 மெயின் தேர்வு நடக்க உள்ளது. தமிழ் சமூக நலத்துறை கடந்த 1993-ம்
ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி பிறப்பித்த அரசாணையில், மாற்றுத்திறனாளிகள் 3
மணி நேரத்துக்குள் தேர்வினை எழுத முடியாது என்பதால், அவர்களுக்கு தேர்வு
நேரத்தில் 50 சதவீதம் அதாவது ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் கூடுதல் நேரம்
வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதனடிப்படையில் மெயின் தேர்வில் எனக்கு
கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு மனு
கொடுத்தேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த
மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். அப்போது டி.என்.பி.எஸ்.சி.
சார்பில் ஆஜரான வக்கீல் சி.என்.ஜி. நிறைமதி, ‘உதவியாளர்களை கொண்டு தேர்வு
எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வின்போது கூடுதலாக 30 நிமிடங்கள்
மட்டுமே வழங்க முடியும்’ என்று கூறினார். இதை எதிர்த்து மனுதாரர் தரப்பு
வக்கீல் கே.முருகேசன் வாதிட்டார்.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘1993-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி. தரப்பு அரைமணி நேரம்தான் வழங்கமுடியும் என்கிறது. எனவே, அரசாணையின் அடிப்படையில் மனுதாரருக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு உத்தரவிடுகிறேன். வழக்கை பைசல் செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment