நல்ல நூல்களே நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி... - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday, 13 July 2020

நல்ல நூல்களே நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி...

நல்ல நூல்களே நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி...!

நான்காகப் பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு வழிகாட்டிப் பலகை நான்கு திசைகளிலும் உள்ள ஊர்களின் பெயர்களைக் வழிகாட்டி நிற்கும்...!

இந்த திசையில் சென்றால் இந்த ஊருக்குப் போகலாம்; இந்த வழியில் பயணித்தால் அந்த ஊருக்குப் போகலாம் என்று நமக்கு நான்கு திசைகளில் எங்கெங்கு போகவியலும் என்று நமக்கு வழி காட்டும்...!

அதொரு தகவல் பலகை, நமக்கு வழி காட்டுவது தான் அது பயன்படுகிறது...!  அதே, நம்மை அந்தந்த ஊர்களுக்கு கூட்டிக் கொண்டு செல்லாது; அது போல் தான் நல்ல நூல்களும்...!

நல்ல நூல்கள் ஒரு வழிகாட்டி...! அதுவும் ஒரு தகவல் பலகை தான்...!

உலகின் தலைசிறந்த நூல்கள் அந்தந்த இனத்தின், மொழியின் பண்பாட்டை அறிவிக்கும் கருவியாகவே காண முடிகிறது...

நூல்கள் என்பதை நாம் பெறும் தாளில் கோர்க்கப்படும் எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கக் கூடாது. அது சமூகத்தைப் புரட்டிப் போடும் நெம்புகோல்கள் என உணர வேண்டும்...

ஒவ்வொரு நாளும் நாம் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நாம் வாசிப்பை மேம்படுத்த வேண்டும்...

ஆரம்பத்தில் நமக்குப் பிடித்த நூல்களை எளிய முறையில் வாசிக்க வேண்டும். பெரிய அறிவாளிகள் தங்களுக்கு துணையாகக் கொண்டிருந்தது நல்ல நூல்களையே...!

எவ்வளவு நல்ல நூல்களாக இருந்தாலும், நாம் அதை வாசிப்பதினால் மட்டும் எந்தப் பயனும் இல்லை, அந்த நூல்கள் அறிஞர்கள் சொன்ன நல்ல கருத்துகளை நாம் செயல்படுத்தத் தொடங்கினால் மட்டுமே, அது நமக்குப் பலன் தரும்...!

அதில் கூறப்பட்ட வழிகளைப் பின்பற்றி அயராது பாடுபட வேண்டும். எந்தத் தடை குறுக்கிட்டாலும் அஞ்சாமல் அதை தகர்த்து எறிந்து விட்டு முன்னேற வேண்டும்...

"செல்வந்தன் ஆக வேண்டுமா...?" என்ற நூலினை வாங்கி, அதைப் படித்து விட்டு அட்டை போட்டு அடுக்கறையில் அடுக்கி வைத்து விட்டு, அடுத்த தெருவில் இருக்கும் தானியங்கி பணம் கொடுக்கும் இயந்திரத்திடம் சென்று, அட்டையைப் பதிந்து பணத்தை அள்ளிக் கொண்டு வந்துவிட இயலாது...!!

அந்நூலில் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்காக, நம்மையே நாம் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்...

இளமையில் தான் சிறந்த பண்புகளுக்கு நாம் பதியமிட இயலும், அப்படிப்பட்ட சிறந்த பண்புகளில் ஒன்று தான் சிறந்த நூல்களை வாசிப்பது...

இன்றைய இளம் தலைமுறைகள், நாம் கூறுவதைக் கேட்பதை விட நாம் செய்வதையே செய்ய விரும்புகின்றனர்,  நாம் வாசிக்கத் துவங்கினால் குழந்தைகளும் வாசிக்கத் துவங்குவர்...

சிறந்த நூல்கள் என்பது அதன் வடிவமைப்பு, அட்டைப்படம் மற்றும் தலைப்புகளில் இல்லை. அது வாசிப்பவரின் மனதிலே கலந்து ஆள வேண்டும்...

ஆம் நண்பர்களே...!

நல்ல நூல்களை நாடுங்கள். ஏதேனும் ஒரு நூலாவது உங்களை மாற்றலாம். அது எந்த அடுக்கறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அது உங்களுக்காகக் காத்திருக்கும்...

அதைத் நாடிச் செல்லுங்கள். உங்கள் அறிவு அனைத்தும் நீங்கள் வாசிக்கும் நூல்களால் பெற்றது என்பதனை மறந்து விடக்கூடாது...

நல்ல நூல்களுக்கும், அதை இயற்றியவர்களுக்கும் நன்றி கூறுங்கள், இயன்றால் அந்த நல்ல நூல்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாசிக்க அறிவுரை செய்யுங்கள்...

வெடிகுண்டு ஒருமுறை தான் வெடிக்கும்; நல்ல நூல்கள் புரட்டும்போதெல்லாம் வெடிக்கும்...

உங்கள் திறன் வாய்ந்த எண்ணங்களுக்கு நீங்கள் உயிர் கொடுக்க நினைத்தால், நல்ல அறிவுசார்ந்த நூல்களை நாடி வாசியுங்கள்...

ஆம், சிறந்த நூல்களே உங்களுக்கு சிறந்த நண்பன்...!

- உடுமலை சு. தண்டபாணி✒️

No comments:

Post a comment

Post Top Ad