கல்யாணமும் இனி காணாமல் போகுமோ.. புதிய ‘சர்வே’ திடுக் தகவல்: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 27 December 2017

கல்யாணமும் இனி காணாமல் போகுமோ.. புதிய ‘சர்வே’ திடுக் தகவல்:

கல்யாணமும் இனி காணாமல் போகுமோ.. புதிய ‘சர்வே’ திடுக் தகவல்:
கல்யாணமும் இனி காணாமல் போகுமோ.. புதிய ‘சர்வே’ திடுக் தகவல்
விரைவாகவே பெண்கள் திருமணம் செய்துகொண்ட காலம் ஒன்று இருந்தது. அதனால் ‘சீக்கிரம் திருமணம் செய்துகொள்வது, பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல’ என்று கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. அடுத்து பெண்கள் வெகுகாலம் திருமணத்தை தள்ளிப்போட்டனர். அதனால் ‘முதிர்கன்னிகளாகும் நிலையை மாற்ற சரியான வயதில் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லும் நிலை உருவானது.

இன்றைய சூழ்நிலை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது. ‘கல்யாணமே வேண்டாம்’ என்று ஒருசாராரும், ‘கல்யாணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழலாம்’ என்று இன்னொரு சாராரும் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் எதிர்காலத்தில் கல்யாணம் என்பதே காணாமல் போய்விடுமோ என்ற கவலை பெற்றோர் மத்தியில் உருவாகியிருக்கிறது.

இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் பெண்கள்தான். அதிகாலையில் எழுந்து, குளித்து, பளிச்சென்று உடை உடுத்தி, காபி போட்டு எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்கு போய், ‘என்னங்க எழுந்திருங்க..’ என்று கணவரை, மனைவி எழுப்பிய காட்சியை இப்போதெல்லாம் சினிமாவில்கூட காணமுடிவதில்லை. ஏன்என்றால் அப்படிப்பட்ட பெண்கள் யாரும் இன்று இல்லை. கணவரின் கைகளை பற்றிக்கொண்டு, நகத்தை கடித்தபடி ஒன்றும் அறியாத அப்பாவிபோல் நடிக்கவும் இன்று எந்த பெண்ணும் தயார் இல்லை. தங்கள் பலத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும், எதிர்பார்ப்புகளை ஈடேற்றிக்கொள்ளவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள். அது அவர்களது திருமணக்கொள்கையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்து சர்வே ஒன்றுக்காக, ‘திருமணம் செய்துகொள்ளாமலே ஆணும்- பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்வி இளம் பெண்களிடம் கேட்கப்பட்டது. அதில் அவர்கள் அளித்த பதில் பலரையும் சிந்திக்கவைத்திருக்கிறது.

‘திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்வது சரி’ என்று 27 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். (முன்பு 4 முதல் 8 சதவீதம் பெண்களே இந்த கருத்தை கூறியிருந்தார்கள்) 65 சதவீதம் பேர், ‘அப்படிப்பட்ட வாழ்க்கை சரியானதல்ல’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் ‘எதிர்காலத்தில் அந்த மாதிரியான வாழ்க்கை முறை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.


அதிக செலவுகளில் நடக்கும் ஆர்ப்பாட்ட திருமணங்களின் மீதும் பெண்களுக்கு நம்பிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. ‘இரண்டு இதயங்கள் இணையத்தானே திருமணம் நடக்கிறது. அதற்குப் போய் இத்தனை லட்சங்களை ஏன் வாரி இறைக்கவேண்டும்’ என்ற கேள்வியையும் அவர்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

“ஆர்ப்பாட்டமான விழா மூலம் திருமண வாழ்க்கையில் இணைந்த பெண்கள் பலர், கூண்டுக்குள் சிக்கிய கிளிகள் போன்று திணறிக்கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். பந்தத்தை விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் அவர்கள் தவித்துக்கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம். சிலரோ ‘அப்பாடா தப்பித்தோம்’ என்றபடி விவாகரத்து வாங்கிவிட்டு ஓடிவந்துவிட்ட கதையும் எங்களுக்கு தெரியும். இப்படி பலவீனமாக இருக்கும் திருமண பந்தத்திற்கு, லட்சங்களில் செலவு தேவையில்லை” என்று கூறும் பெண்கள், மத ஆச்சார சம்பிரதாயங்களோடு எளியமுறையில் திருமணம் நடந்தால் போதும் என்று கூறுகிறார்கள்.

காதலையும் இந்த தலைமுறை அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘காதல் முறிந்து போனால் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததெல்லாம் பழங்கதை. இப்போது அப்படி ஒரு ஆறாத சோக உணர்வு தோன்றுவதுமில்லை. அதை செய்ய எங்களுக்கு நேரமும் இல்லை. காதல் தோற்றால், போகட்டுமே என்று விட்டுவிடுவோம்” என்று சொல்லும் கல்லூரி மாணவிகள், ‘எல்லா பெண்களுக்கும் ஒரு காதல் அனுபவம் கட்டாயம் அவசியம்’ என்றும் சொல்கிறார்கள்.

அவர்களிடம், ‘நீங்கள் காதலித்தவரை திருமணம் செய்ய, உங்கள் குடும்பத்தார் எதிர்த்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டபோது, ‘பெற்றோர் சொல்வதைத்தான் கேட்பேன்’ என்று 41 சதவீதம் பெண்கள் சர்வேயில் பதில் கூறியிருக்கிறார்கள். 32 சதவீத பெண்கள், ‘எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் காதலித்தவரை கைவிடமாட்டேன். 

இறுதி வரை காதலுக்காக போராடுவேன்’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களில் பெரும்பகுதியினர், ‘திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று பெற்றோருக்கு அழுத்தம்கொடுப்பேன்’ என்று கூறியிருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒருசிலர்கூட ‘தற்கொலை செய்துகொள்வேன்’ என்றெல்லாம் மிரட்டல் கருத்து தெரிவிக்கவில்லையாம்! அதனால் பெண்கள் யதார்த்தத்தை புரியத் தொடங்கி விட்டார்கள் என்று அந்த சர்வே குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad