Health risks of childhood obesity | Kalvikural.com - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 25 January 2017

Health risks of childhood obesity | Kalvikural.com

குண்டாக இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானதா? 
குண்டாக இருக்கும் குழந்தைகள் தான், ஆரோக்கியமான குழந்தைகள் என நினைப்பது தவறு. குண்டு குழந்தைகளில் ஆரோக்கியம் காக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.  
குண்டான குழந்தைகள் தான், குண்டாகும் பெரியவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியர்களைப் பொறுத்தவரை, வயிற்றுப்பகுதியில் கொழுப்பு சேரும் உடலமைப்பைப் பெற்றுள்ளோம்.
அதற்கு, அரிசி சாதமும் ஒரு காரணம். குழந்தை பிறந்த பின், ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், இயல்பாகவே எடை அதிகரிக்காது. தாய்ப்பால் மட்டும் கொடுத்து, 10 கிலோ எடை இருந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தைகள் தான், ஆரோக்கியமான குழந்தைகள் என நினைப்பது தவறு.
ஒரு வயது குழந்தையின் எடை, 10 கிலோ, 2 வயதில், 12 என ஆறு வயது வரை, 20 கிலோ எடை இருக்கலாம். 13 வயதில், 39 - 42 கிலோ எடையளவு இருக்கலாம். அதிக உயரத்துடன் எடையும் அதிகமாக இருந்தால், அது நோய் அறிகுறியல்ல. உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இன்மை காரணமாக இருக்கலாம்.

குட்டையாக, குண்டாக இருந்தால் நோய்க்கான வாய்ப்பு இருக்கலாம். உடல் எடையை குறைக்கும் மாத்திரைகள், உலகில் எங்குமே இல்லை. உணவு முறையை மாற்றி, உடற்பயிற்சி செய்தாலே போதும்.

நம் நாட்டு உணவுபழக்கதில் நிறைய சாதத்திற்கு, காய்கறிகளை கொஞ்சமாக தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறோம். பழங்களை ஜூஸ் ஆக்கினால், நார்ச்சத்து கிடைக்காது. பழங்களாக மூன்று நேரமும் சாப்பிடலாம். பாலை தண்ணீர் ஊற்றி காய்ச்சாமல் 2, 3 கப் குடிக்க தரலாம். குழந்தைகள், உணவை மென்று சுவைத்து, நிதானமாக சாப்பிட வைக்க வேண்டும்.


அதற்காக, ‘டிவி’ பார்த்துக் கொண்டோ, படித்துக் கொண்டோ நீண்ட நேரம் சாப்பிடக்கூடாது. தினமும், 30 முதல், 60 நிமிடங்கள் வரை, கண்டிப்பாக விளையாட அனுமதிக்க வேண்டும்.

பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள், அதிக கலோரியுள்ள துரித உணவுகளை பிள்ளைகள் சாப்பிடுகின்றனர். உடற்பயிற்சியும் செய்வதில்லை. வரவு அதிகம், ஆனால் செலவே இல்லை எனும் போது, அவை வயிற்றில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. ‘சொன்ன பேச்சை கேட்டால்’ சாக்லேட் வாங்கித் தருவதாக வீட்டில் கூறுகிறோம். பள்ளியில் தண்டிப்பதென்றால், மைதானத்தைச் சுற்றி ஓடச்சொல்கின்றனர், தோப்புக்கரணம் போடச் சொல்கின்றனர்.

இதெல்லாம் தண்டனையில்லை, உடற்பயிற்சி என்பதை சொல்லித் தர வேண்டும். பள்ளிக்கு சைக்கிளில் அனுப்பலாம். குழந்தைகளுக்கு, அதிக உடல் எடையால் அதிக ரத்தஅழுத்தம், முதிர்ச்சியடையாத மாரடைப்பு, கொலஸ்ட்ரால், நீரிழிவு, கல்லீரலில் கொழுப்பு, எலும்பு இணைப்புகளில் வலி ஏற்படும்.

ஒத்த வயதுடைய மற்றவர்கள் கேலி செய்யும் போது, குண்டு குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அந்தநேரத்தில், அதிகமாக சாப்பிட்டு மேலும் குண்டாகும் வாய்ப்புள்ளது. மனச்சோர்வு, பதற்றமும் ஏற்படும். ஒத்த வயதுடைய குழந்தைகளுடன், விளையாட முடியாது. அதிக உடல் எடையால், ஆயுளில் ஐந்தாண்டுகள் குறைந்துவிடும் என்கிறது அமெரிக்க ஆய்வு.

குழந்தைகளுக்கு பள்ளி, டியூசன் என, மதிப்பெண்ணுக்கு தரும் முக்கியத்துவத்தை, உடற்பயிற்சி, விளையாட்டு என உடலுக்கும் முக்கியத்துவம் தருவதை, பெற்றோர் உணர வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad