How To Study Difficult Subjects ? Kalvikural.com - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday 20 December 2016

How To Study Difficult Subjects ? Kalvikural.com

கடினமான பாடங்களையும் நினைவில் நிறுத்தலாம்!*
நன்கு தெரிந்த பாடப் பகுதிகளைப் புரிந்துகொள்வதும், பிறகு அவற்றை நினைவில்கொள்வதும் மாணவர்களுக்கு எளிமையானதே. அவ்வப்போது திருப்புதல்களை மேற்கொண்டாலே போதும், அவற்றை நினைவுபடுத்தித் தேர்வில் சுலபமாக எழுதிவிடலாம். ஆனால் புரியாத வார்த்தைகள் இடம்பெறும்போது அவற்றைப் படிப்பதும் சிரமம், நினைவில் நிறுத்துவதும் கடினம். உதாரணமாகத் தாவரவியல் - விலங்கியல் பெயர்கள், இடங்களின் பெயர்கள், கிரேக்க-லத்தீன் மொழிகளை மூலமாகக் கொண்ட பெயர்கள் போன்றவற்றைப் புரிந்துகொள்வதும், மனதில் இருத்துவதும் கடினம். அத்தகைய நிலையில் தங்களுக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட பெயர்களை, சம்பவங்களை, காட்சிகளை நினைவுபடுத்திக் கடினப் பகுதிகளை ஞாபகத்தில் கொள்ளலாம். ‘ரைமிங்’ வார்த்தைகள், பிரபலமான வாசகங்கள் ஆகியவற்றை அவரவருக்கு ஏற்றாற்போல தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 21 நாட்கள் பயிற்சி புதிதாக ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாட்கள் செய்தால் அது நம்முடைய பழக்கமாக மாறிவிடும் என அறிவியல்ரீதியாகச் சொல்லப்படுகிறது. அதே 21 நாட்கள் ஒரு செயலைச் செய்யாமல் விட்டுவிட்டால் அது மறந்துபோகவும் அதிகம் வாய்ப்புள்ளது.
மாணவர்களைப் பொறுத்தவரைப் பாடத்தைப் படித்துவிட்டு 21 நாள் கழித்துப் படித்தால், அதே பாடம் புதிதாகத் தோன்றும். எனவே 21 நாட்கள் நிறைவடையும் முன்பே அவ்வப்போது பாடங்களைச் சுருக்கமாகத் திருப்புதல் அவசியம். எழுதிப் பார்க்கலாமா? முதல் முறை பாடங்களைப் படிக்கும்போது, எழுதிப் பார்த்துப் படிப்பது சிறந்தது. தவறுகளைக் களைய இரண்டாம் முறை எழுதிப் பார்ப்பதும் உதவும். ஆனால், ஒவ்வொரு திருப்புதலுக்கும் எழுதிப் பார்ப்பது நேரத்தை விழுங்கிவிடும். எனவே திருப்புதல்களின்போது முக்கிய வார்த்தைகளையும் வரிகளையும் மட்டுமே எழுதிப் பார்ப்பது நல்லது. அல்லது பாடச் சுருக்கத்தை மன வரைபடமாக விரைவாக வரைந்து பார்க்கலாம். அதிலும் எழுத்தில் போதிய வேகம் இல்லாதவர்களும் நேர மேலாண்மையில் பின்தங்கியவர்களும் எழுதிப் பார்ப்பதற்கு எனத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். ஓய்வு, உறக்கம், உணவு நினைவாற்றல் என்பது விழுந்து விழுந்து படிப்பதால் மட்டும் வாய்த்துவிடாது. நன்றாகப் படித்துத் தயாராவது போலவே, சத்தான உணவைச் சாப்பிடுவதும், போதிய உறக்கமும் ஓய்வும் அவசியம். பெரும்பாலான மாணவர்கள் தேர்வு நாள் நெருங்கும்போது சதா கண் விழித்துப் படிப்பார்கள். சிலர் பள்ளி விட்ட பிறகும் இரவு வரை அடுத்தடுத்துச் சிறப்பு வகுப்புகளுக்குச் செல்வார்கள். பள்ளியில் நடத்திய பாடங்கள், சிறப்பு வகுப்புகளில் நடத்திய பாடங்கள் எனக் கூடுதல் சுமையால் படிக்கும் ஆர்வத்தையும் நாளடைவில் இழந்துவிடுவார்கள். இந்த வகையிலான அதீத முயற்சிகள் முதலுக்கே மோசம் ஆகிவிடும். அன்றாடம் ஓய்வும் உறக்கமும் அவசியம். உற்றுப் படிப்பதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு, சேர்ந்தாற்போல அமர்ந்திருப்பதால் முதுகு, கழுத்தில் ஏற்படும் வலி போன்றவை நாளடைவில் உடல் நலப் பாதிப்பாக மாறலாம். எனவே அவ்வப்போது சிறு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம். பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும். ஏனைய தினங்களில் கண் விழித்துப் படிப்பவர்கள் கூட, தேர்வுக்கு முன்தினம் போதிய நேரம் உறங்க வேண்டும். இதன் மூலம் உடலின் சோர்வு நீங்குவதோடு, மூளை புத்துணர்ச்சி பெறும். நினைவுத் திறனில் பாதிப்பு ஏற்படாது. தேர்வைத் தெம்பாக எதிர்கொள்ளலாம். அதேபோல, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நினைவுத் திறனை மேம்படுத்த மருந்தோ அதிகப்படியாகக் குறிப்பிட்ட உணவு பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. அதிகம் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுப் பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். ஆவியில் வெந்தது, எளிதில் செரிக்கக்கூடிய சத்தான உணவைச் சாப்பிடுவது நல்லது. அதே நேரம் சத்தாகச் சாப்பிடுகிறேன் என்று வயிறு முட்டச் சாப்பிட வேண்டாம். தொலைக்காட்சியைத் தவிர்க்கவும் படிக்கும்போது இடையில் அடிக்கடி தொலைக்காட்சி பார்க்கும் வழக்கம் பலருக்கு உள்ளது. காட்சி வடிவில் ஒன்றைப் பார்க்கும் போது அது அப்படியே மனதில் பதிந்துவிடும். படித்த பாடத்துக்குச் சம்மந்தமில்லாத கேளிக்கை காட்சிகள் அவ்வாறு பதிந்தால் சற்று முன்னர் படித்த பாடங்கள் நினைவிலிருந்து இடம்பெயர்ந்துவிடும். தொலைக்காட்சி பார்ப்பதற்குப் பதிலாகப் பாடத்துக்குத் தொடர்புடைய பொது அறிவுக் கட்டுரைகளை வாசிப்பது, குறுக்கெழுத்துப் புதிர்களுக்குத் தீர்வு கண்டுபிடிப்பது, சுடோகு விளையாடுவது ஆகியவை பொழுதுபோக்காகவும் இருக்கும் மூளைக்குச் சுறுசுறுப்பும் ஊட்டும். தேர்வறையில் தேவைப்படுபவை பதற்றமோ பயமோ இல்லாமல் இருந்தாலே போதும், நல்ல நினைவாற்றலோடு சிறப்பாகத் தேர்வு எழுதலாம். கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே படிப்பது, படித்ததை எழுதிப்பார்ப்பது போன்றவை தேர்வைத் தன்னம்பிக்கையோடு அணுகக் கைகொடுக்கும். தேர்வு நாளன்று போதிய அவகாசத்தில் தேர்வு மையத்துக்குச் செல்வது, மனதை அமைதியாக வைத்திருப்பது, சக மாணவர்களோடு குழப்பப் பேச்சுகளைத் தவிர்ப்பது ஆகியவையும் முக்கியம். தேர்வு எழுதும் மையம், அறை போன்றவற்றை முடிந்தால் முன்தினமே பார்வையிடுவதோ, அடையாளம் தெரிந்து வருவதோ நல்லது. தேர்வின்போது, வழக்கமாக அமர்ந்து படிக்கும் எழுதும் பாவனையைக் கற்பனை செய்தால் புதிய இடம் என்பதை மறந்து இயல்பாகச் செயல்படலாம். விடைத்தாளில் ‘சாய்ஸ்’ இல்லாத 1 மதிப்பெண் கேள்விகளை முதலில் எழுதிவிட்டு, மற்ற வினாக்களுக்குச் செல்லலாம். 1 மதிப்பெண் பகுதியில் ஏதேனும் பதில் தெரியாத வினா இருந்தால் அதற்கான வரிசை எண்ணை மட்டும் குறித்துவிடலாம். பிறகு சாவகாசமாகத் தேர்வின் நிறைவில் உரிய விடையை நினைவு கூர முயற்சிக்கலாம். மற்ற வினாக்களுக்கான சூத்திரம், வரையறை போன்றவற்றில் இடையிடையே மறதி ஏற்பட்டாலும் இந்த உத்தியையே கையாளலாம். (கட்டுரைக்கான முக்கியக் குறிப்புகளை வழங்கியவர் பா.ஜான்லூயிஸ், நினைவாற்றல் பயிற்சியாளர், திருச்சி.) பா. ஜான்லூயிஸ்

No comments:

Post a Comment

Post Top Ad