கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு 
நஷ்டஈடு நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் கமிஷனுக்கு ஆறு மாத 
காலஅவகாசம் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கடந்த 
2004ல் கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 90 
குழந்தைகள் உயிரிழந்தனர்.
18க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர்.உயிரிழந்த 
மற்றும் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்திற்கு நஷ்டஈடு 
நிர்ணயிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்விபத்தில் குழந்தையை இழந்த 
இன்பராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் நஷ்டஈட்டை நிர்ணயிக்க 
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகத்தை நியமித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 
தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இதையடுத்து நீதிபதி 
சண்முகத்தை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 
'உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பணியை தொடர இயலாது' என நீதிபதி சண்முகம் 
தெரிவித்தார்.
அதனால் ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமனை நியமித்து உயர் நீதிமன்றம் 
உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த ஆண்டு செப்டம்பரில் பிறப்பிக்கப்பட்டது. 
ஆறு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.நீதிபதி 
வெங்கட்ராமன் புதுச்சேரி நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாகவும் உள்ளார். 
அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி 
வெங்கட்ராமன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த தலைமை 
நீதிபதி எஸ்.கே.கவுல் நீதிபதி சிவஞானம் அடங்கிய 'முதல் பெஞ்ச்' மேலும் ஆறு 
மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

No comments:
Post a Comment