மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday, 23 October 2018

மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு :

சமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது பற்றி சிறிது சிந்திப்போம்...
மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு
இளைய சமுதாயம் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறது. மாணவர்களும் சமூகவலைத்தளங்களில் பொழுதை வீணடிப்பதாக பெற்றோர் நம்புகிறார்கள். பிள்ளைகளை கட்டுப்படுத்துவதும், பின்தொடர்வதும் பெற்றோரின் வாடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் மாணவர்கள் சமூக வலைத்தளத்தில் நேரம் செலவழிப்பதை விரும்புகிறார்கள், நேரடியாகவும், ரகசியமாகவும் அதில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

மாணவர்களுக்கான பயனுள்ள விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் இல்லையா? சமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது பற்றி சிறிது சிந்திப்போம்...
சமூக வலைத்தளம் எதற்காக?

சமூக வலைத்தளங்களைப் பற்றி போதிக்க வேண்டிய கடமை பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. முக்கியமாக அதை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதை அவர்கள் ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும்.

சமூக வலைத்தளம் சிறந்த தகவல் தொடர்பு சாதனம் என்பதை எதிர்கால தலைமுறையினரான மாணவர்கள் நிச்சயம் அறிய வேண்டும். அதில் உள்ள சாதக - பாதகங்களை அறிந்து பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக அது பொழுதுபோக்கு தளம் அல்ல, தகவல் தொடர்பு தளம் என்பதை உணர வேண்டும்.

மாணவர்கள், நவீன கற்றல் தளமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும். கூட்டு திட்டமிடலுக்கும், தகவல் திரட்டுவதற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் வலைத்தளங்களை உபயோகிக்கப் பழக வேண்டும். இந்த நியாயமான பழக்கத்தை பள்ளி - கல்லூரியில் பழக்கப்படுத்தினால் அவர்களின் கற்றல் முறையில் மேம்பாடு ஏற்படும். கண்டிப்பதும், தடைபோடுவதும் சமூக வலைத்தளங்கள் தீய பாதை என்பதைப்போல புறக்கணிக்க வலியுறுத்துவதும் அவர்களின் மனதில் எதிர்மறை விளைவை உருவாக்கும் என்பதை பெற்றோரும், ஆசிரியர்களும் உணர வேண்டும். அதுவே, சமூக வலைத்தளங்களில் ஏதோ இருக்கிறது என்பதை ரகசியமாக தேடத் தூண்டுவதாக அமைந்துவிடும்.

சமூக வலைத்தளங்களில் மயங்கவும், வெறுக்கவும் ஒன்றுமில்லை. தேவையான விஷயங்களுக்காக சார்ந்திருப்பதும், அதை புரிந்து கொள்வதுமே அவசியம்.

ஆசிரியரின் பங்களிப்பு என்ன?

சமூக வலைத்தளங்கள் பற்றி ஆசிரியர்கள் விளக்க வேண்டும். அது நமது கற்றல் முறைக்கு அவசியமானது என்பதை புரிய வைக்க வேண்டும். அதன் பயன்களை விளக்க வேண்டும். எந்த வலைத்தளத்தில், எந்த வகையான செய்முறை அல்லது தகவல் தொகுப்பு நமது வகுப்புக்கு ஏற்றது என்பதை விளக்க வேண்டும்.

அந்த வலைத்தளத்தின் அடிப்படைகளை விளக்குவதுடன், பாடம் சார்ந்து, கற்றல் சார்ந்து அதை திறம்பட எப்படி பயன்படுத்துவது என்பதை ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.

வகுப்பறையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கேற்ற வடிவமைப்பு மற்றும் வழிமுறைகளை செய்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். நேர்மறை, எதிர்மறை விஷயங்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்க வேண்டும். ஆனால் வகுப்பில் கவனச்சிதறல் ஏற்பட சமூக வலைத்தளம் காரணமாகிவிடக்கூடாது.

இத்தகைய அம்சங்கள் ஆசிரியரால், பெற்றோரால் வழிகாட்டப்படும்போது, மாணவர்களின் அச்சம் விலகும். ரகசியத்தன்மை குறைந்து, தவறுகளை திருத்திப் பயன்படுத்தப் பழகுவார்கள்.

சமூக வலைத்தளங்களில் மாணவர் - ஆசிரியர் ஒற்றுமை வளர வேண்டும். மகிழ்ச்சியுடன் மாணவர்கள் பாடம் கற்க வேண்டும். மாணவர்களுக்கான பாட பயிற்சித்திட்டங்கள், வழிகாட்டி திட்டங்கள், குழு தகவல் தொடர்பு, முக்கிய விஷயங்களைப் பகிர்தல் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்த வேண்டும்.

எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

இன்றைய தேதிகளைப் பற்றிய வரலாறை, முக்கிய நிகழ்வுகளை சமூக வலைத்தளங்கள் வழியே அறியலாம். இதை ஆசிரியர்கள் விளக்கலாம். மாணவர்களும் தேடிப் பிடித்து கற்கலாம். பகிர்ந்து கொள்ளலாம்.

இன்றைய செய்திகளையும் அறிந்து கொள்ள பயன்படுத்தலாம். இதற்காக வகுப்பில் சில நிமிடங்களை ஒதுக்கலாம்.

உலக நடப்புகள், கலாச்சாரங்களில் இருந்து அவசியமானவற்றை குறிப்பெடுக்கவும், தனியே சேகரித்து, சேமித்து பயன்படுத்த மாணவர்கள் பழக வேண்டும். ஆசிரியர் வழிநடத்த வேண்டும்.

பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் மாணவர்களுக்கான குழுக்கள் உள்ளன. அவற்றில் மாணவர்களுக்கான பயனுள்ள தகவல்கள் பகிரப்படுகிறது. அதை அறிந்து கொள்ளலாம். ஐயங்களுக்கு, தேவைகளுக்கு தீர்வு தேடலாம்.

அவசியமான ஹேஸ்டேக் தகவல்களை பகிரலாம். பயனுள்ள ஹேஸ்டேக் உருவாக்கி பரப்பலாம்.

பாடத்திட்டங்களை ஒருங்கிணைப்பு செய்ய வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாடத்திட்டங்களைத் தாண்டிய திறமைகளை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தினால், அது மாணவர்களின் திறமையை ஊக்கப்படுத்துவதாகவும், ஆசிரியர் மாணவர் உறவை வலுப்படுத்துவதாகவும் அமையும். கதை, கட்டுரை, கவிதைகளை, ஓவியங்களை தங்களுக்கான குழுவில் பகிரவும், பாராட்டவும் செய்யலாம்.

பயணங்களின்போதான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தலாம். அது அனுபவத்தை அதிகரிக்கும். உதவிகளையும், தேவைகளையும் நிறைவேற்றும்.

அறிவை வளர்க்கும் கேள்விகளை கேட்பதற்கான, சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தலாம்.

மொழிகளை அறிதல் மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டலாம். பயனுள்ள வலைப்பக்கங்களை இணைத்து பயன்படுத்தலாம்.

தங்கள் பாடத்துறை சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகளுடன் தகவல் தொடர்பை வளர்க்கலாம். உரையாடல்கள் நிகழ்த்தி நேரில் பயிற்சி பெறும் வாய்ப்பையும், பல்வேறு தகவல்களையும் பரிமாற்றம் செய்யலாம்.

இதுபோலவே பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசுத் துறைகளை பின் தொடரலாம். கல்வி சார்ந்த விஷயங்களை அறிந்து பலருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

சமூகம் பற்றிய உங்கள் பார்வையை, விமர்சனங்களை வெளியிட்டு திறமையை வளர்க்கலாம்.

வர்த்தகத்துறை, பொருளாதாரத்துறை, தொழில்துறை என ஒவ்வொருதுறை சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து பயன்பெறலாம்.

படிக்கும் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க கூறலாம்.

உங்கள் குழுவின் இயக்கத்தையும், நல்ல தகவல்களையும் புத்தகமாக, இதழாக வெளியிடலாம்.

பல்வேறு வகுப்புகளையும் ஒருங்கிணைக்கும் தளமாகவும், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாம்.

தவறை குறைக்க, பயத்தை போக்க...

சமூக வலைத்தளங்கள் எல்லோரையும் உலகளாவிய குடிமக்களாக மாற்றியிருக்கிறது. ஆம், நாமெல்லாம் டிஜிட்டல் குடிமக்கள். நாடு கடந்த, ஜாதி மதம் கடந்த மக்களாக நம்மை மாற்றிய பெருமை சமூக வலைத்தளங்களுக்கு உண்டு. அங்கே சிறுமைத் தனமான பொழுதுபோக்கு அம்சங்கள், வேடிக்கை விஷயங்களை மாணவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கைவிட வேண்டிய ஒன்றாகும்.

சமூக வலைத்தளத்தில் மாணவர்களும் இருக்கிறார்கள், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர் - மாணவர்கள் இணைந்த குழுக்கள் உருவாகிவிட்டால் பெற்றோர் உள்ளிட்ட யாருக்குமே வீணான பயம் தேவையில்லை. ஒவ்வொருவரின் தனித்த இயக்கங்களே பெற்றோரை அச்சுறுத்துவதாக உள்ளது. வலைத்தளம் என்பது குழுக்களுக்கானது, ஒருங்கிணைப்புக்கானது என்பதை உணர்ந்து பயன்படுத்த ஆசிரியரின் வழிகாட்டல் அவசியமாகும். பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் குழு உருவாக்கப்பட்டுவிட்டால் அச்சங்கள் குறைந்து, கற்றல் மேம்பாடு அடையும்!

No comments:

Post a comment

Post Top Ad