RESPECTED PARENTS JUST READ IT | AVOID CHILD SUICIDE: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday 19 December 2016

RESPECTED PARENTS JUST READ IT | AVOID CHILD SUICIDE:

குழந்தைகள் தற்கொலை! வெ.இறையன்பு  ஐ.ஏ.எஸ்.
தற்கொலைக்கான காரணங்கள் வயதோடு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகமிருந்தாலும் எல்லா வயதினரிடமும் இந்தப் போக்கு நிலவுகிறது. குழந்தைகள், பதின்ம வயதினர், வயோதிகர்கள் ஆகிய மூவரிடமும் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. குழந்தைப் பருவம் என்றால் மகிழ்ச்சியானதுதானே? என்கிற சமூகப் பார்வையை குழந்தைப் பருவத்தில் நடக்கும் தற்கொலைகள் மறுதலிக்கின்றன.  பெரிதுபடுத்தப்படும் தற்கொலைச் செய்திகள் பதின்மப் பருவத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலை நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுடைய தற்கொலையே அதிகமாக இருக்கிறது.
அண்மைக் காலங்களாக உலகெங்கிலும் குழந்தைகளிடம் தற்கொலை உணர்வு அதிகரித்திருக்கிறது.  மேலை நாடுகளில் இது கவலையளிப்பதாக இருக்கிறது.  அதிலும் குறிப்பாக ஆண் குழந்தைகளிடம் ஐந்து மடங்கு இது அதிகமாகக் காணப்படுகிறது.  தற்கொலை என்றால் என்ன என்பதே தெரியாமல் சில குழந்தைகள் இந்த முடிவை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள்.
வீட்டிலிருக்கும் மாத்திரைகளை இஷ்டத்திற்கு எடுத்துச் சாப்பிடுவது. துப்பாக்கி இருந்தால் எடுத்து சுட்டுக்கொள்வது, பூச்சி மருந்தைக் குடிப்பது போன்ற செயல்கள் மிகச் சாதாரணமாக காணப்படுகின்றன. அவர்கள் அவ்வாறு செய்வதற்கு முன்பு வித்தியாசமான சில நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

வீட்டைவிட்டு ஓடுவது, அடிக்கடி விபத்துக்குள்ளாவது, கோபாவேசத்தில் குதிப்பது, தன்னைத்தானே இகழ்ந்து கொள்வது, யாரிடமும் பழகாமல் இருப்பது, எதைச் சொன்னாலும் கோபித்துக் கொள்வது, விரக்தியோடு காணப்படுவது, மரணச் செய்திகளை திரும்பத் திரும்ப படிப்பது போன்ற செயல்கள் குழந்தைகளிடம் காணப்பட்டால் பெற்றோர்கள் எச்சரிக்கை அடைய வேண்டும்.  அவர்களைத் திருத்துவதாக நினைத்துக்கொண்டு    தண்டித்தால் அது அவர்களை இன்னும் விரக்தியடையச் செய்யும். ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைகளை அடிப்பது, எல்லார் முன்பும் கண்டிப்பது, வாய்க்கு வந்தபடி வசைபாடுவது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கும்.
சில பெற்றோர்கள் குழந்தைகளை உடைமைகளைப் போல நடத்துகிறார்கள்.  அவர்களுக்கென்று மனமிருப்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்றிருக்கும் குழந்தைகள் புத்திக்கூர்மையுடன் இருக்கிறார்கள். மற்ற குழந்தைகள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.  ஒப்பிடுவது தவறுதான். ஆனால் பெற்றோர்கள்தாம் இந்த விபரீத விளையாட்டைத் தொடங்குகிறார்கள்.
ஒரு குழந்தையிடம், "நீ எதற்கும் பயன்படமாட்டாய்'' என திரும்பத் திரும்ப பெற்றோர்  கூறும்போது அது மனமுடைந்து போய்விடுகிறது. அப்போது மனநல மருத்துவர் திருநாவுக்கரசு குறிப்பிடுவதைப்போல மூன்று காரணங்கள் அவர்கள் முன்னே நிற்கின்றன. ஒன்று வாழ்வதற்கு இவ்வுலகம் ஏற்றதல்ல என்கிற எண்ணம்.  இரண்டாவதாக, வாழ்வதற்கு எனக்கு அருகதையில்லை என்ற எண்ணம்.  மூன்றாவது, என் சாவு இவ்வுலகத்திற்கு மிகுந்த நற்பயன் கொடுக்கும் என்ற தவறான புரிதல்.  இவை மூன்றும் குழந்தைகளை அவமானப்படுத்துவதால் உண்டாகும் விளைவுகள்.
எந்தக் குழந்தையையும் அவமானப்படுத்துவதன் மூலம் அபிவிருத்தி செய்ய முடியாது.  சுவாமி பாஸ்கரானந்தா ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.  நன்றாகப் படிக்காத ஒரு மாணவன் அவரிடம் வந்தான்.  ஒருமாதம் தொடர்ந்து அவரைச் சந்தித்து அறிவுரைகள் பெற்றான். அதற்குப் பிறகு அவன் எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றான்.  உடனே ஆசிரியர்கள் அதிசயித்துப்போய் ஸ்வாமிஜியிடம், "அந்த மாணவனுக்கு எப்படி இவ்வளவு நன்றாக புரியும்படி பாடம் சொல்லிக் கொடுத்தீர்கள்?'' என்று கேட்டார்கள்.  அதற்கு அவர், "அவனுக்கு நான் எந்தப் பாடத்தையும் கற்றுத் தரவில்லை, அவனுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தினேன், அவ்வளவுதான்'' என்று கூறினார்.
ஒரு மாணவன் படிப்பிலோ, வேறு திறன்களிலோ ஜொலிக்க வேண்டுமென்று கருதினால் அவனைக் குட்டிக் குனிய வைப்பதன் மூலம் சாதிக்க வைக்க முடியாது.  தட்டிக் கொடுப்பதன் மூலமே தலை நிமிர வைக்க முடியும்.  பெற்றோர்கள் குழந்தைகள் குறைவாக மதிப்பெண்கள் பெற்று வருகிறபோது திட்டித் தீர்ப்பதன் மூலம் அவர்களை எழுச்சி பெறச் செய்ய முடியாது.  மாறாக, அது அவர்களை இன்னும் நம்பிக்கையிழக்கச் செய்யும்.  நம்மால் முடியாது என்று அவர்கள் சுயமனோவசியம் செய்யத் தொடங்குவார்கள்.  குறிப்பிட்ட பாடத்தை நினைத்தாலே அவர்கள் பயப்பட ஆரம்பிப்பார்கள்.  அந்தப் பாடத்தை தவிர்க்க முயல்வார்கள்.  அது அவர்களை இன்னும் வீழ்ச்சியடைய வைத்துவிடும்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவை ஆறுதல்.  குழந்தைகள் குறைவாக மதிப்பெண்கள் பெற்று வருகிறபோது அவர்கள் முதுகைத் தட்டிக்கொடுத்து கவலைப்படாதே பார்த்துக்கொள்ளலாம் என்று  சொன்னால் காலாண்டு பரீட்சையில் கால் இடறி விழுந்த குழந்தை பொதுத்தேர்வில் ஓட்டப் பந்தயத்தில் உன்னதமான இடத்தைப் பிடிக்கும்.  பெற்றோர்களே ஆறுதல் அளிக்காவிட்டால், குழந்தைகளின் தகுதியைப் போற்றாவிட்டால், அவர்கள் நொந்திருக்கும்போது அரவணைக்காவிட்டால், யார் அவர்களை உற்சாகப்படுத்துவார்கள்? என்பதை யோசிக்க வேண்டும்.
சில பெற்றோர்கள் காட்டமான வார்த்தைகளின் மூலம் குழந்தைகளின் தன்மான உணர்வை கிளர்ந்தெழச் செய்ய முடியும் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள்.  அடிக்கடி "செத்துத் தொலை' என்று திட்டுபவர்கள் இருக்கிறார்கள்.  இதுபோன்ற வசைச் சொற்கள் ஏதேனும் ஒரு நேரத்தில் குழந்தைகளின் மனத்தில் காயத்தை ஏற்படுத்திவிடும்.  நாம் இருப்பது பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிற குழந்தைகளும் இருக்கிறார்கள். நாம் செத்துப் போய் அவர்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துவோம் என்று எண்ணுகிற குழந்தைகளும் இருக்கிறார்கள்.
கணவன், மனைவி அடிக்கடி குழந்தைகளின் முன்பு சண்டை போடுவதும், சாமான்களை தூக்கி எறிந்து கிரிக்கெட் விளையாடுவதும்  நிம்மதியற்ற இல்லச் சூழலை ஏற்படுத்திவிடும்.  இதுபோன்ற நேர்வுகளில் தாய் அப்பாவிடம் அடிவாங்குவதையோ, அடிபட்டு ரத்தம் வழிவதையோ பார்க்க நேர்ந்தால் அந்தக் குழந்தைகள் தற்கொலைக்கு முயலுவார்கள்.   அதிகமான வன்முறை சார்ந்த சூழலில் வளர்வதும், பாதிப்பை ஏற்படுத்தும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்காக அதிக நேரம் ஒதுக்குவதும், அவர்கள் பிரச்னைகள் குறித்துப் பேசுவதும் அவசியம்.  இன்று பெற்றோர்கள் ஆளுக்கொரு ஊடகத்தில் மூழ்கி போய்விடுகிறார்கள்.
முகநூலில் வந்த செய்தியைப் பார்க்க அவசரமாக ஓடி, குளியல் தொட்டியில் குழந்தையை மூழ்கச் செய்த தாய்மாரைப் பற்றி படிக்க நேர்ந்தது.  ஒருவேளையாவது வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும்.  அப்போது அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்காமல் நிதானமாக உணவைச் சாப்பிட வேண்டும்.  வாயில் உணவில்லாதபோது சின்னச் சின்ன உரையாடல்கள் இருக்கலாம்.  வாரம் ஒருமுறை பெற்றோர்கள் குழந்தைகளோடு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.  பள்ளியில் நடந்த நிகழ்வுகளை அவர்கள் சொல்வதற்கு ஊக்கப்படுத்தலாம்.  குழந்தை தொடர்ந்து சோர்வோடு வீட்டிற்கு வந்தால் பள்ளியில் தொடர்புடைய ஆசிரியரிடம் அதுபற்றி விவாதிக்கலாம்.  தங்களிடம் சிலவற்றைக் கூற குழந்தைகள் தயங்கினால் வேறொருவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம். 
மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை திருடிக்கொண்டு அவர்களைச் சாதனையாளர்களாக்குவதில் எந்தப் பயனும் இல்லை.

No comments:

Post a Comment

Post Top Ad