Dr. V.Iraianbu IAS | USEFUL ARTICLE: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday 31 October 2016

Dr. V.Iraianbu IAS | USEFUL ARTICLE:

பார்வைகள்! வெ.இறையன்பு  ஐ.ஏ.எஸ்.
கடுமையான வாழ்க்கைச் சூழலைச் சந்திக்கும் அனைவருமே தங்களை மாய்த்துக் கொள்வதில்லை. வறுமை,விபத்து, ஆதரவின்மை,தீராத நோய்கள் ஆகியவை இருக்கிற மனிதர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகம் அவர்களை ஒதுக்கி புறக்கணித்து அவமானப்படுத்தி உதாசீனப்படுத்தினாலும் அவற்றையெல்லாம் மீறி வாழ்க்கையின் ருசியை சுவைத்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருமே வாழ்க்கையை வெறுத்து மரணமே மார்க்கம் என்று மயானத்தை நாடி பயணிப்பதில்லை. 
சிலர் மட்டுமே சிலந்தி வலையைச் சிறையாக நினைத்து உலகத்தைவிட்டு ஓடிவிடுவதுதான் வழி என ஓய்ந்து விடுகிறார்கள். அந்த சிலர் மட்டும் ஏன் மற்றவர்களைவிட அதிகம் தற்கொலை வயப்படுகிறார்கள் என்பதை அறிவியல் உலகம் தொடர்ந்து துருவித் துருவி ஆய்வு செய்கிறது.   எந்தப் பிடிக்கும் அசைந்து கொடுக்காதது மனித மனம். மன இயங்கு பார்வை, சமூகப் பண்பாட்டுப் பார்வை, உயிரியல் பார்வை என்கிற மூன்று கோணங்களில் தற்கொலைக்கான காரணங்கள் அலசப்படுகின்றன. மன இயங்கு பார்வையை ஆதரிக்கிற அறிஞர்கள் மன அழுத்தத்தின் காரணமாகவும், அடுத்தவர்கள் மீதுள்ள கோபத்தைத் தங்கள்மீது திருப்பிவிடுவதன் காரணமாகவும் சிலர்  தற்கொலையைத் தேர்த்தெடுப்பதாகக் கருதுகிறார்கள்.  வில்ஹம் ஸ்டேகல் என்பவர் முதலில் இந்தக் கருத்தை முன்மொழிந்தார்.  அடுத்தவர்களைக் கொல்ல வேண்டும் என்றோ, அடுத்தவர்கள் மரணமடைய வேண்டும் என்றோ எண்ணாமல் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே கொல்ல முனைவதில்லை என்று அறிவித்தார். கார்ல் மெனிங்கர் தற்கொலையை "180 டிகிரி கோணத்துக் கொலை' என்று குறிப்பிட்டார்.

பிரியமானவர்கள் இழப்பை அனுபவிக்கும் மக்கள் தங்களை அவர்களுக்குள் திணித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்களைத் தங்கள் அடையாளமாக்கிக் கொள்கிறார்கள்.  அப்போது தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் சுய வெறுப்பைச் சுண்டிவிடுகின்றன.  விருப்பமானவர்கள் மீது ஏற்படும் வெறுப்பு தங்கள் மீதே பாய்கிறது.  பின்னர், மனச்சோர்வில் கொண்டு போய்விடுகிறது.

27 வயதான ஒரு பெண் கத்தியை எடுத்து கை நரம்புகளை அறுத்துக் கொண்டார். காப்பாற்றப்பட்ட அவர் கொடூரமாகவும், வசவு வார்த்தைகளோடும், சுய நலத்தோடும் தான் இருப்பதால் அப்படி ஒரு செயலைச் செய்ய முனைந்ததாக குறிப்பிட்டார். அவளைப் பரிசோதித்த மனவியல் மருத்துவர், அவள் கூறிய அத்தனை குணமும் அவளுடையதல்ல  அண்மையில் மறைந்த அவள் தந்தையுடைய சுபாவம் என்று குறிப்பிட்டார்.  அப்போதுதான் அவள் அமைதியடையத் தொடங்கினாள்.

சின்ன வயதில் ஏற்படும் இழப்புகள் வளர்ந்த பிறகு தற்கொலைக்குத் தூண்டுகின்றன என ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  200 குடும்பங்களை ஆராய்ந்ததில் சின்ன வயதில் பெற்றோர்களை இழப்பது தற்கொலை முயற்சியாளர்களிடம் 48 சதவிகிதம் காணப்பட்டது.  பெற்றோர் மணவிலக்குச் செய்தாலும் பதின்மப் பருவத்தில் குழந்தைகள் மனத்தை அது பாதிக்கிறது.  சமூகப் பண்பாட்டுப் பார்வையில் மூன்று காரணங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
முதலாவது, தன்முனைப்புத் தற்கொலை
சமூகம் எந்தக் கட்டுப்பாட்டையும் செலுத்த முடியாத நபர்கள் இவ்வகையைச் சார்ந்தவர்கள்.  வாழுகிற இடத்தில் விதிமுறைகளுக்கோ, சட்ட திட்டங்களுக்கோ கட்டுப்படாதவர்கள் இவர்கள்.  தனிமைப்படுத்தப்படுவது, புறக்கணிக்கப்படுவது போன்றவை இவர்களை விரக்தியின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும்.
பரோபகார தற்கொலைகள் இரண்டாவது ரகம்
சமூகத்தோடு பின்னிப் பிணைந்த சிலர் அடுத்தவர்கள் நலனுக்காக தம்மையே மாய்த்துக் கொள்வதுண்டு. மற்ற சிப்பாய்களைக் காப்பாற்ற குண்டைக் கட்டிக் கொண்டு குதிப்பது, வியட்நாம் யுத்தத்தின்போது தங்களை எரித்துக் கொண்ட புத்த துறவிகள்,  விமானத் தாக்குதலின்போது தங்கள் உயிரைக் கொடுத்த ஜப்பானிய காமிகேஜ் பைலட்டுகள் அனைவருமே இந்த ரகத்தைச் சார்ந்தவர்கள்.  சமூகத்தின் மானத்தைக் காப்பாற்ற தங்கள் உயிரையே கொடுக்க முன்வருகிறவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் உயிர் துறப்பவர்கள், நாட்டின் மீது தாக்குதலை எதிர்க்க தன்னைக் காவுகொடுப்பவர்கள் அனைவருமே பரோபகாரத்தின் அடிப்படையில் தற்கொலை செய்து கொள்பவர்கள்.

யூட் எஸ்கிமோக்களிடம்  ஓர் அரிய வழக்கம் இருந்தது.  நெருங்கிய உறவினரின் உயிரை தன் ஆவி காப்பாற்றும் என்று அவர்கள் இறக்கத் துணிவார்கள்.

அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும்போது கெளரவமாக மரணத்தைத் தழுவி மடிபவர்களும் உண்டு. அது பொது சடங்காகக் கொண்டாடப்படுவதுண்டு.

மூன்றாவது ரகம் இயலாமை
சிலருடைய சமூகச் சூழல் பாதுகாப்பான அமைப்புகளை அவர்களுக்கு வழங்காது.  குடும்பம் உதவியையோ, வாழ்க்கைக்கான பொருளையோ தருவதில்லை.

சட்டமற்ற இந்த சமூகம் அங்கிருக்கும் மனிதர்களை எதோடும் சேரவிடாமல் தனிமைப்படுத்துகிறது.

தன்முனைப்புத் தற்கொலையாளர்கள் சமூகத்தைப் புறக்கணித்தவர்கள். ஆனால், இவர்களோ சரியில்லாத சமூகத்திற்குச் சொந்தக்காரர்கள்.  எல்லாச் சமூகங்களிலும் சில நேரங்களில் இதுபோன்ற சூழல் உருவாகிறது.

பொருளாதாரத் தொய்வு ஏற்படும்போது தற்கொலை விகிதம் அதிகரிக்கிறது. இடம் பெயர்தல் நிகழும்போது 34 நாடுகளில் தற்கொலை விகிதம் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒருவருடைய தனிப்பட்ட  சுற்றுப்புறச் சூழல் மாறும்போதும் இது நிகழ்கிறது.  திடீரென அதிகப் பணம் கைகளில் புரளும்போது சமூக உறவுகள் மாறிப் போகின்றன.

உயிரியல் பார்வை, பெரும்பாலும் குடும்பப் பின்னணியை ஆராய்ந்து தற்கொலைக்கு மரபுக் கூறுகளின் பங்களிப்பை முன் வைக்கிறது. தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்கள் உள்ள குடும்பங்களில் தற்கொலைகள் விகிதமும் அதிகமாக இருக்கிறது. சொந்தக்காரர்கள் தற்கொலை செய்திருந்தால் பதின்ம வயதில் தற்கொலை முயற்சிகள் நிகழ்கின்றன. ஒரே மாதிரி இருக்கும் 19 இரட்டையர்களை ஆராய்ந்ததில் அவர்களில் ஒருவர் தற்கொலை செய்திருந்தால் இன்னொருவரும் செய்து கொள்வதும் நான்கு நேர்வுகளில் நடந்திருக்கின்றன.  ஆனால், அது ஒன்றாகப் பிறந்து வெவ்வேறாகத் தோன்றும் இரட்டையர்களில் நிகழவில்லை.

தற்கொலை செய்து கொள்பவர்களிடம் செரட்டோனின் என்கிற நரம்புப் பரிமாற்ற இரசாயனம் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே அவர்களை மனத்தொய்வுக்கு ஆட்படுத்துகிறது.  தற்கொலை செய்து கொண்டவர்களின் மூளையைப் பரிசோதித்தபோது இது தெரிய வந்தது.
மனத்தொய்வே செரட்டோனின் குறையும்போது ஏற்படுவதுதான். அது ஒருவிதமான வன்மப்போக்கை வளர்க்கிறது. அதுவே கொலை, கொள்ளை போன்றவற்றிற்குக் காரணம்.

இது அடுத்தவர்களோடு சரியான பழக்கத்தைத் தடைசெய்துவிடுகிறது. மனத்தொய்வு இல்லாதவர்களும் இப்படி ஆக்ரோஷமாக நடந்துகொள்வதுண்டு. அது சில நேரங்களில் அடுத்தவர்கள் மீது பாயாமல் தங்களையே தாக்கும் அம்பாக ஆகும்போது தற்கொலையாக மாறிவிடுகிறது.

அடிக்கடி மனத்தொய்வு அடைபவர்களையும் எல்லோரிடமும் சண்டை வளர்ப்பவர்களையும் கோபக்கார இளைஞர்கள் என்று கொண்டாடாமல் மனநல மருத்துவரை அணுகச் சொல்வது நல்லது.
(தொடரும்)

No comments:

Post a Comment

Post Top Ad