45 லட்சம் குழந்தைகளுக்கு இலவசச் சீருடைகள்! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday 2 June 2015

45 லட்சம் குழந்தைகளுக்கு இலவசச் சீருடைகள்!

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 45 லட்சம் குழந்தைகளுக்கு இலவசச் சீருடை வழங்குவதற்கென தையல் கூட்டுறவுச் சங்க பெண்கள் விரைந்து தைத்துக் கொடுத்து வருகின்றனர்.
 சமூக நலத் துறை சார்பில் இயங்கி வரும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள் வழங்கப்படுகின்றன.
 மே மாதம் 45 லட்சம் குழந்தைகளுக்கு இலவச இணைச் சீருடைகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டாம் கட்டமாக 45.57 லட்சம் மாணவர்களுக்கு இலவச இணைச் சீருடைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
 இலவசச் சீருடை வழங்குவதற்கு தையல் கூட்டுறவுச் சங்க மகளிருக்கு சமூக நலத் துறை சார்பில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ரூ. 90 கோடி வரை தையல் கூலி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு சீருடையை விரைந்து தைத்துக் கொடுக்க முடிகிறது.
 சீருடை: சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சமூக நலத் துறை அதிகாரிகள் கைத்தறி, துணி நூல் துறையிடம் சீருடை தைப்பதற்கு தேவைப்படும் மொத்த துணிகள் பெறப்படுகின்றன.
 சீருடை அளவு மாதிரிகள் (பேட்டர்ன்): சரியான அளவுடன் சீருடை அணிந்துகொள்வற்காக, துணி வெட்டும் மையத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 5 சீருடை அளவுகளும், ஆறாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 5 சீருடை அளவுகள் என மொத்தம் 10 அளவுகளில் சீருடை மாதிரிகளை சீருடை வடிவமைப்பாளர்கள் (மாஸ்டர் கட்டர்கள்) செய்கின்றனர்.
 சீருடை வகைகள்: பாவாடை, சுடிதார், பேண்ட் ஆகியவற்றுக்கு மெரூன் கேஸ்மாண்ட் துணியும், ஜாக்கெட், மேல்சட்டைக்கு மெரூன் வெளிர் பழுப்பு துணியும், அரைக்கால், முழுக்கால் சட்டைக்கு மெரூன் டிரில் உள்ளிட்ட துணி வகைகள் சீருடைகள் தைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. நீலகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் சீதோஷண நிலைக்கு ஏற்ப முழுக்கை சட்டை, சிறப்பு மேல்சட்டை வழங்கப்படுகிறது.
 இது குறித்து சமூக நல ஆணையரக அதிகாரி ஒருவர் கூறியது: ஆண்டுதோறும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு 4 இணை இலவசச் சீருடை வழங்கப்படுகிறுது. இதற்கென, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கைத்தறி துணி நூல் துறையிடம் துணிகள் பெற்று, தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக ரூ.7 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை தையல் கூலி வழங்கப்படுகிறது. இதுவரை 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.288 கோடி செலவிடப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் சீருடை வழங்க தையல் கூட்டுறவு மகளிருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் சீருடை வழங்கவும் முடிகிறது என்றார்.
 77ஆயிரம் தையல் கூட்டுறவு மகளிர்!
 சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு சீருடைகள் தைப்பதற்காக தமிழகம் முழுவதும் 92 தையல் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தையல் கூட்டுறவுச் சங்கப் பெண்கள் செயல்படுகின்றனர். நாள்தோறும் 3 லட்சம் முதல் 4 லட்சம் சீருடைகள் வரை தைத்துக் கொடுக்கின்றனர். ஆண்டுதோறும் 4 இணை இலவசச் சீருடை வழங்கவேண்டும். இதில், ஒருமுறை சீருடை வழங்க 30 முதல் 40 நாள்கள் வரை தேவைப்படுகின்றன. இதுவரை 45.57 லட்சம் குழந்தைகளுக்கு 90 லட்சம் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. சீருடை தைப்பதற்கு கூட்டுறவு மகளிருக்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளதால், தையல் தெரிந்த மகளிர் பலரும் ஒருங்கிணைந்து தைத்துக் கொடுக்கின்றனர். இதற்கென சமூக நலத் துறை நவீன ரக இயந்திரங்களை வாங்கியுள்ளது. இதனால் சீருடை வழங்கும் பணி விரைவாகச் செயல்படுத்தப்படுகிறது.
 

No comments:

Post a Comment

Post Top Ad